சென்னை: நாங்க வந்தும்டோம்னு சொல்லு...என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதை அந்த கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12, 601 பதவிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என 268 இடங்கள் வாக்கு எண்ணும் மையங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு, பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 1வது வார்டில் பாஜக முதல் வெற்றிக்கணக்கை தொடங்கியது. மதுரை மாநகராட்சி 86 வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி.பூமா ஜனாஸ்ரீ வெற்றி பெற்றார். கிருஷ்ணகிரி நகராட்சி 10வது வார்டு பாஜக வேட்பாளர் சங்கர் வெற்றி பெற்றார். காலை முதல் பல இடங்களில் வெற்றிக்கணக்கை பதிவு செய்து வருகிறது பாஜக.
பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமையின் கீழ் தமிழகத்தில் பல இடங்களில் வார்டு கவுன்சிலர் இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது நாங்க வந்துட்டோம்னு சொல்லு என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஒரு பாஜக தொண்டர்.
சென்னையில் 174வது வார்டில் திமுக வெற்றி பெற்றாலும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது பாஜக தொண்டர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. நோட்டா கட்சி என்று கிண்டலடித்தவர்களுக்கு மத்தியில் பாஜக வலிமையுடன் வளர்வதாக பதிவிட்டுள்ளார் ஒரு தொண்டர்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் கூறிய நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 வார்டுகளை வென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கொல்லங்கோடு நகராட்சி 1வது வார்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும் அம்மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளிலும் இதுவரை 8 வார்டுகளில் பாஜக வென்றுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி 9வது வார்டில் திருமதி.மீனா தேவ் வெற்றி பெற்றுள்ளார் சத்தியமங்கலம் நகராட்சி 8வது வார்டில் பாஜக ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுகவின் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபித்துள்ளது பாஜக. நோட்டா உடன் போட்டி போடும் கட்சி என்று பலரும் கிண்டலடித்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட வார்டுகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளதால் #நாங்க வந்துட்டோம்னு சொல்லு என்று ஹேஸ்டேக் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர் பாஜகவினர்.