கோல்கட்டா; மேற்கு வங்க சட்டசபையை முடக்கி வைத்துள்ளது தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் கடுமையாக இருப்பதாக, மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. 'கவர்னர் ஜக்தீப் தன்கரை திரும்பப் பெற வேண்டும்' என, திரிணமுல் காங்., தொடர்ந்து கூறி வருகிறது.இந்நிலையில் மேற்கு வங்க சட்டசபையை முடக்கி வைப்பதாக, கவர்னர் ஜக்தீப் தன்கர் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பான தகவலை சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக திரிணமுல் காங்., எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் வேறு சில கட்சிகள் கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
கவர்னர் ஜக்தீப் தன்கரின் முதல் பதிவை அடிப்படையாக வைத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'இதுவரையிலான மரபு மற்றும் நடைமுறைகளில் இல்லாத ஒன்றை மேற்கு வங்க கவர்னர் உருவாக்கியுள்ளார். 'மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் சாசனத்தை மதித்து நடந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதில்அளித்து, கவர்னர் தன்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:மேற்கு வங்க அரசின் பரிந்துரையை ஏற்றே, அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, சட்டசபையை முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கள் மிகவும் கடுமையாக உள்ளன. உண்மையை புரிந்து கொள்ளாமல், விபரங்கள் தெரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல் தேசிய அளவில் சர்ச்சையான நிலையில் கர்நாடகாவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் பிஎல் சந்தோஷ் விமர்சனம் செய்துள்ளார். வாரிசு அரசியலில் ஈடுபடும் நபர்கள் எதற்கும் தயாராக இல்லை, எதுவும் தெரிந்து கொள்ளவில்லை என்பதை முதல்வர் ஸ்டாலினின் இந்த ட்வீ ட் காட்டுகிறது. கடந்த காலங்களில் இவர்கள் சொல்வதை மக்கள் நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. பாவம். தமிழ்நாட்டிற்கு இதைவிட நல்ல ஆட்சி நிர்வாகம் தேவை, என்று முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் பிஎல் சந்தோஷ் விமர்சனத்திற்கு திமுக எம்பி வில்சன் பதில் அளித்துள்ளார். அதில், இவர்கள் கவர்னர் கொடுத்த விளக்கத்தை சரியாக படிக்கவில்லை. முதல்வரின் ஒப்புதலுக்கு பின் அவையை ஒத்திவைப்பதாக ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிறார். இது அமைச்சரவையின் பரிந்துரை எங்கே பிஎல் சந்தோஷ்? உங்களுக்கு தெரியாத விஷயங்களை பேசி நீங்கள் உங்களை முட்டாள் என்று நிரூபிப்பதற்கு பதிலாக அமைதியாக இருக்கலாம், என்று பதில் அளித்துள்ளார். இவர்கள் இடையிலான மோதல் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.