சென்னை: சென்னையில் நேற்று(ஜூலை 28) செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி, பேசும் போது விளையாட்டு நமது கலாசாரத்தில் தெய்வீகமாக பார்க்கப்பட்டது. தமிழகத்திற்கும் செஸ் போட்டிக்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது. தமிழகத்தில் இருக்கும் பல கோயில்கள் பழமையானவை. தமிழ் கலாசாரத்தை பிரதிபலிப்பவை. செஸ் விளையாட்டை நினைவுபடுத்தும் வகையில், சதுரங்க வல்லபநாதர் கோவில், தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், திருப்பூவனூரில் உள்ளது. கடவுளே செஸ் விளையாடி இருப்பதை இக்கோவில் காட்டுகிறது. கடவுளே இளவரசியுடன் சதுரங்க ஆட்டத்தை ஆடியுள்ளார் . சதுரங்கத்துடன் வலிமையான சரித்திர தொடர்பு உண்டு எனக்கூறினார்.
தமிழகத்திலேயே பலருக்கு சதுரங்கம் விளையாடிய சிவனை பற்றியும்,அந்த சிவனுக்கு தனியாக கோயில் இருப்பது பற்றியும் தெரியாது. அந்த கோயிலை பற்றிய ஸ்தல வரலாறு இதோ:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 166 வது தேவாரத்தலம் ஆகும். வசுதேவன் என்ற மன்னன் மனைவி காந்திமதியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி சிவாலயங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தான். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று இருவரும் மனமுருகி வணங்கினர். இவர்களின் வேண்டுதலை ஏற்ற இறைவன் பார்வதியை அவர்களுக்கு குழந்தையாக பிறக்கும்படியும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியை குழந்தைக்கு செவிலித்தாயாக இருக்கும்படியும் அருள்புரிந்தார். ஒரு முறை மன்னன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடும் போது பார்வதி தேவி அங்கிருந்த தாமரையில் சங்கு வடிவில் தோன்றினாள். மன்னன் அந்த சங்கை கையில் எடுத்தவுடன் அது குழந்தையாக மாறியது. இதனால் மன்னனும் ராணியும் மகிழந்து குழந்தைக்கு "ராஜராஜேஸ்வரி' என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
இறைவன் அருளின்படி சப்தமாதர்களுள் ஒருவரான சாமுண்டீஸ்வரி குழந்தைக்கு வளர்ப்புதாயாக இருந்தாள். குழந்தை சகல கலைகளையும் கற்று தேர்ந்தது. குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்பவர் யாருமில்லாதபடி திகழ்ந்தாள். இதையறிந்த மன்னன் தன் மகளை சதுரங்க விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே மணமுடிக்கப்படும் என அறிவித்தான். ஆனால் இவளை சதுரங்கத்தில் யாரும் ஜெயிக்கவில்லை. அக்காலத்தில் முனிவர் ஒருவர் அறிவுரையின்படி தன் மகள், வளர்ப்புத்தாய் சாமுண்டி, ராணி மற்றும் பரிவாரங்களுடன் மன்னர் தல யாத்திரை மேற்கொண்ட போது பூவனூர் என்ற இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தார்.
அப்போது இறைவன் சித்தர் வேடத்தில் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்று தெரிவித்தார். மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு வேண்ட இறைவனும் ராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வென்று தன் உண்மையான வடிவுடன் அனைவருக்கும் தரிசனம் தந்தார். இதனால் மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தார். இதனால் இத்தலத்து இறைவன் சதுரங்க வல்லப நாதர் எனப்படுகிறார். அம்பிகை ராஜேஸ்வரியும், வளர்ப்புத்தாய் சாமுண்டியும் இத்தலத்தில் தனித்தனி சன்னதிகளில் இருந்து அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் என வேண்டிக்கொள்ள இறைவனும் அவ்வாறே அருள்புரிந்தார்.