இந்து முன்னணியின் சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்று வந்தது. அதன் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் இம்மாத தொடக்கத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
கனல் கண்ணன் அந்த கூட்டத்தில் “ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்று பேசியிருந்தார். இப்படி அவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது, கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொது மக்களிடையே விரோதத்தை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல் பரவியது. எனவே, அவரை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் அவர் கைதாகிவிடுவார் என்றும் செய்திகள் வெளியாகின.
கனல் கண்ணன் தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்பதால்தான், தலைமறைவாகி உள்ளதுடன், முன்ஜாமீன் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. அதற்கேற்றார்போல், அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் தலைமறைவாகி இருந்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வர உள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதியின் வீட்டில் அவரை ஆஜர் படுத்த உள்ளனர்.