புதுடில்லி :: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுதும் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை செய்தார். ''தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார நிலைக்கு பாதிப்பு இல்லாத வகையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும்,'' என அவர் வலியுறுத்தினார்.
கொரோனா பரவல் மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஆலோசனை நடத்தினார். பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
அப்போது முதல்வர்களிடம், பிரதமர் மோடி கூறியதாவது:நாடு முழுதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே இருந்த சந்தேகங்களுக்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் அனைத்து மாநிலங்களும் மிகவும் எச்சரிக்கையுடன், கவனமுடன், நிலைமையை கையாள வேண்டும். அதே நேரத்தில் பீதியடையத் தேவையில்லை.தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.கொரோனா வைரசுக்கு எதிராக நாட்டின் 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை துரிதப்படுத்த வேண்டும். கடந்த 10 நாட்களில் மட்டும் மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் இருந்து எந்த சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது என்பது தெளிவாகிறது.நம் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் உலகிலேயே மிகச் சிறந்தவை என்பது நிரூபணமாகிஉள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி, நேற்று மாலை அனைத்து மாநில முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கொரோனா தொற்றின் ஒமைக்ரான் அலையை கட்டுப்படுத்த தமிழகம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசி போட தகுதியானோரில் 64 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.மேலும், 15 வயது முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனைகள் எண்ணிக்கை, ஆக்சிஜன் உற்பத்தி திறன், ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள்தமிழகத்தில் அதிகரித்துள்ளன. நிலைமையை சமாளிக்க, அனைத்து அரசு இயந்திரமும் முழுமையாக தயார் நிலையில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழகம் துணை நிற்கும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்
நம் நாட்டில் 15 - 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதுவரை மூன்று கோடிக்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த இளம் சிறார்களிடம் பொறுப்புணர்வு, ஆர்வம்அதிகமாக உள்ளது பாராட்டுக்குரியது. மன்சுக் மாண்டவியா,மத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ.,