சென்னை: பிரபல அரசியல் விமர்சகரும், இளைய பாரதம் என்ற யுடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத்தை, ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் கந்தக்குமார் ஆகியோர் அவசர கதியில் கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் ஜூன் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கார்த்திக் கோபிநாத் மற்ற யடியூப்பர்களை போல் இல்லாமல், நாகரீகமாகவும் விருப்பு வெறுப்பு இன்றியும் தமிழக அரசியலை விமர்சனம் செய்பவர். ஆளுங்கட்சி மீது விமர்சனம் வைத்தாலும், தனது கருத்துகளை நாகரீகமாக பதிவு செய்பவர். எந்த சூழ்நிலையிலும் அநாகரீகமான வார்த்தைகளையோ, ஆபாசமான கருத்துகளையோ கூறாதவர். இவர் சமீபகாலமாக, ஆளும் திமுக அரசு பற்றி விமர்சனம் செய்து வந்தார்.
அவரை ஆவடி போலீசார், திடீர் என கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது என்ன குற்றச்சாட்டுகளை வைத்து வழக்கை ஜோடிக்கலாம் என்று நீண்ட நேரம் போலீசார் ஆலோசித்ததாக தெரிகிறது.
இதற்கு காரணம், ஆளும் கட்சியை விமர்சனம் செய்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டதை கோர்ட் ஏற்கவில்லை. ஏனெனில், கைது செய்ததற்காக வலுவான காரணங்களை போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. இதனால், கோர்ட்டின் கண்டனத்திற்கும் போலீசார் ஆளாகி, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‛‛கார்த்திக் கோபிநாத் விஷயத்தில் கோர்ட்டிடம் குட்டு வாங்கக் கூடாது என்பதில் ஆவடி போலீஸ் கவனமாக இருக்கிறது. கோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளாகாமல் கார்த்திக் கோபிநாத்தை எந்த சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யலாம் என்று போலீசார் ஆலோசித்து வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு தான் அவர் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டிருக்கலாம் '' என்றார்.
சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‛‛அரசியல் விமர்சகர்கள் விஷயத்தில் போலீசார் ஒருதலைப்பட்சமாக நடக்கின்றனர். சிதம்பரம் நடராஜர் பற்றி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் கருத்து தெரிவித்த யடியூப்பர்களை கைது செய்ய வேண்டும் என்று சிவனடியார்கள் நுாற்றுக்கணக்கில் கூடி போராடினர். ஆனால், போலீசார் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஆளுங்கட்சியை நாகரீகமாக விமர்சனம் செய்த கார்த்திக்கோபிநாத்தை அவசர கதியிலும், அதிவேகத்திலும் கைது செய்துள்ளனர். இவரை கைது செய்த வேகத்தை, தொடர்ந்து ஹிந்து மதம் மீது அவதுாறுகளை பரப்பும் மற்ற விமர்சகர்களிடம் ஏன் போலீஸ் காட்டுவதில்லை. ஆளும் திமுக அரசு, இந்த விஷயத்தில் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது'' என்றனர்.
இது தொடர்பாக பிரபல விளையாட்டு மற்றும் அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் கூறும் போது, கோபிநாத் வழக்கு தொடர்பாக பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பி கேவி முனுசாமி என்னிடம் கூறும்போது, இந்து சமய அறநிலையத்துறை, கொள்முதல் செய்வதற்கு நேரடியாக பணம் செலுத்துவது கிடையாது. தங்கள் சார்பில், நன்கொடையாளர்களை பணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளும். சிறுவாச்சூர் கோவில் சிலைகளுக்கும் பக்தர்கள், முன்பணம் செலுத்தியுள்ளனர்.பணிகள் நிறைவடையும் தருவாயில் இருந்த தனியார் கோவிலுக்கும் பக்தர்கள் பணம் செலுத்தியுள்ளதாக முனுசாமி கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிறுவாச்சூரில் உள்ள கோவிலுக்கான சிலைகள் செதுக்கும் பணி, புதுச்சேரியின் வில்லியனூர் அருகே நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.தன்னை அணுகிய கார்த்திக் கோபிநாத், மக்களிடம் பணம் வசூலித்து நிதி வழங்கப்படும் எனவும், 33 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியதாக முனுசாமி தெரிவித்தார். பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக கூறியுள்ள முனுசாமி, சிலைகள் விரைவில் தயாராகிவிடும் என்றார். இதற்கான பணத்தை இந்து சமய அறநிலையத்துறை செலுத்தவில்லை எனவும் முனுசாமி என்னிடம் கூறினார். வசூலிக்கப்பட்ட பணம் சில பக்தர்களுக்கு பயன்படுத்தப்படும் எனக்கூறிய கார்த்திக்கோபிநாத் முனுசாமியிடம் கூறினார். அதேநேரத்தில், பணிகளை விரைவாக துவக்குவதற்கு முன்பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் கார்த்திக் கோபிநாத் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது புரியவில்லை. விரைவில் உண்மைகள் வெளியே வரும். இவ்வாறு அவர் கூறினார்.
'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி!
''ஆன்மிகத்துக்கு ஆதரவாக யாரெல்லாம் செயல்படுகின்றனரோ, அவர்களை பொய் வழக்கு போட்டு, அசிங்கப்படுத்துவதில், தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது. ''அதற்கு சட்ட ரீதியாக தக்க பாடம் புகட்டப்படும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.
நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:'இளைய பாரதம்' என்னும் 'யு டியூப் சேனல்' நடத்தும் கார்த்திக் கோபிநாத், ஆன்மிக சிந்தனைஉள்ள இளைஞர். பெரம்பலுார் அருகில் இருக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் மற்றும் அதன் அருகில் இருக்கும் பெரியசாமி கோவில் சிலைகளை, ஹிந்து விரோத அயோக்கியர்கள் உடைத்துள்ளனர்.
அதை புனரமைக்க வேண்டும் என்பதற்காக, ஆன்மிக பக்தர்கள் எடுக்கும் முயற்சிக்கு உதவ, கார்த்திக் கோபிநாத் முன்வந்தார். 'மிலாத்' என்ற செயலி வழியாக, கோவில்களை புனரமைக்க பணம் வசூல் செய்தார். அந்த பணம், அவரிடம் பத்திரமாக உள்ளது. இதற்கிடையில், பெரியசாமி கோவிலுக்கு சொந்தமான மாடப்புரம் கிராமத்து மக்கள், கோவில் திருப்பணிகளை செய்யும்படி, கார்த்திக் கோபிநாத்தை வலியுறுத்தி உள்ளனர். அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் பணம் வசூலித்து ஏமாற்றி விட்டதாக, சேலத்தை சேர்ந்த ஒருவர், கார்த்திக் கோபிநாத் வசிக்கும் ஆவடிக்கு வந்து, புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே கோபத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள், உடனே நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழக போலீஸ் நடவடிக்கைகள் தவறான பாதையில் செல்வதால், நானே இந்த விஷயத்தில் நேரடியாக களம் இறங்க போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:தமிழக போலீஸ், தன்னிச்சையாக இயங்குகிறதா அல்லது முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்தபடி, யார் யாரை கைது செய்ய வேண்டும் என, பட்டியல் போட்டு அனுப்பும் மூவரின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்படுகிறதா என்பதை, டி.ஜி.பி., தெரிவிக்க வேண்டும். சிறுவாச்சூர் கோவில் சிலைகளை உடைத்தவர், சிலை திருட்டில் ஈடுபட்டோர், கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருப்போர் மீது அரசும், போலீசும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், உடைக்கப்பட்ட சிலைகளையும், கோவிலையும் புனரமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக் கோபிநாத்தை கைது செய்கின்றனர். இது தான், 'திராவிட மாடல்' அரசு செயல்படும் லட்சணம். என்னை நெருங்க அஞ்சி, எனக்கு அறிமுகமானவர்களை சிக்கலுக்கு உள்ளாக்கி, எனக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்ற, கேவலமான எண்ணத்தோடு செயல்படுகின்றனர். இந்த போக்குக்கு தமிழக பா.ஜ., சார்பில் சரியான பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
