திருவொற்றியூர் :திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், இன்று நடக்கிறது.
சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டுதோறும், மாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு மாசி பிரம்மோற்சவம், 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில், உற்சவர் சந்திர சேகரர், சூரிய, சந்திர பிரபை, நாகம், சிம்மம், யானை, ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, பூப்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வந்தார்.
முக்கிய நிகழ்வான சந்திர சேகரர் திருத்தேர் உற்சவம், நேற்று முன்தினம் நடைபெற்றது. உற்சவர் நேற்று காலை குதிரை வாகனத்திலும், மாலை இந்திர விமானத்திலும் எழுந்தருளி மாடவீதி கண்டார்.மாசி பிரம்மோற்சவத்தின் மற்றொரு நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், இன்று காலை, 10:30 - 12:00 மணிக்குள், கோவில் வளாகத்தில் இருக்கும் வசந்த மண்டபத்தில் நடக்கிறது.
திருக்கல்யாணம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவியின் அறிவுறுத்தல் படி, நிழலுக்கு பந்தல்கள் அமைத்தல், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.தவிர, பக்தர்கள் நிச்சயம் முககவசம் அணிந்து, கொரோனா விதிகளை பின்பற்றி பங்கேற்ற வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மாலை 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு மகிழடி சேவை நடக்கிறது. நிறைவு நாளான, 17ம் தேதி, பின் இரவில் தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவம், 18 திருநடனம் நிகழ்வுடன் மாசி பிரம்மோற்சவம் திருவிழா நிறைவுறும்.