``ஆரம்பக் காலங்களில் நேர்காணல்களில் தேர்ச்சி பெறாததை நான் வருந்தத்தக்க விஷயமாகப் பார்க்கவில்லை. தோல்வி இன்னும் உழைக்கத் தூண்டும். கூகுளில் எனக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட லண்டனில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததுதான் எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது."
`முயற்சி திருவினையாக்கும்' என்பது எல்லா காலத்துக்கும் பொருந்தும் வாசகம். தன் விடா முயற்சியால் சம்ப்ரிதி யாதவ் என்னும் இளம்பெண் தன் கனவைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார். பாட்னாவைச் சேர்ந்த 24 வயதுப் பெண் சம்ப்ரிதி யாதவ் கூகுள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் சம்பளம் பெறும் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்த வேலைக்கு இவர் வருவதற்கு முன் 50 வெவ்வேறு நிறுவனங்களுக்கு நேர்காணலுக்குச் சென்றுள்ளார். அங்கெல்லாம் நிராகரிக்கப்பட்ட பின்பும் முயற்சியைத் தளரவிடவில்லை சம்ப்ரிதி. சம்ப்ரிதியின் அப்பா ராம்ஷங்கர் வங்கி ஊழியர். அம்மா சஷி பிரபா பீகார் மாநில அரசின் மேம்பாட்டுத் துறையில் துணை இயக்குநர்.
டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.டெக் பட்டம் பெற்ற பின்பு நேர்காணல்களுக்கு செல்லத் தொடங்கினார் சம்ப்ரிதி. ஃப்ளிப்கார்ட், அடோப் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை கிடைத்தது. அவற்றை மறுத்த சம்ப்ரிதி, 44 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்தார். பின்பு கூகுள் நிறுவனத்தில் 9 கட்ட நேர்காணல்களுக்குப் பிறகு பணியில் சேர்ந்துள்ளார்.
``ஒவ்வொரு முறை நேர்காணலுக்குச் செல்லும்போதும் பதற்றமாகவே உணர்வேன். என் பெற்றோரும் நண்பர்களும் ஆதரவாக இருந்தனர். பெரிய நிறுவனங்கள் பற்றிப் புரிந்துகொள்ளவே நிறைய நேரம் செலவிட்டேன். அதுபோன்ற நிறுவனங்களில் நேர்காணலே ஒரு விவாதம்போல்தான் இருக்கும். அதற்குத் தகுந்தபடி நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும்
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன். சிறுவயது முதல் என் பெற்றோரின் கடின உழைப்பைக் கவனித்து வளர்ந்தேன். எனக்கும் அதுவே ஊக்கமளித்தது. நானும் படிப்பிலும் பிற விஷயங்களிலும் என்னால் இயன்ற உழைப்பைக் கொடுப்பேன்.
ஆரம்பக் காலங்களில் நேர்காணல்களில் தேர்ச்சி பெறாததை நான் வருந்தத்தக்க விஷயமாகப் பார்க்கவில்லை. தோல்வி இன்னும் உழைக்கத் தூண்டும். கூகுளில் எனக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட லண்டனில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததுதான் எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது” எனும் சம்ப்ரிதியின் அட்வைஸ் இதுதான். ``உங்கள் இலக்கு எது என முடிவு செய்த பின்பு பொறுமையாக, நிதானமாக ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்க வேண்டும். இலக்கை அடைய உங்களிடம் உள்ள திறமை, ரிசோர்ஸஸ் முதலியவற்றை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்!”