சென்னை :''ஒரே நாடு;- ஒரே தேர்தல் வரபோகிறது என ஆருடம் சொல்லி, பா.ஜ., வுக்கு பழனிசாமி டப்பிங் பேசுகிறார்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மதுரை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கஷ்டப்படுகிற மக்களுக்கு தி.மு.க., ஆட்சியில் நிதி உதவி செய்யவில்லை என்பதுதான், பழனிசாமி, பன்னீர்செல்வத்தின் 'லேட்டஸ்ட்' பொய்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், அ.தி.மு.க., ஆட்சியில் கொரோனா பிடியில் சிக்கி தவித்தவர்களுக்கு தலா 4,000 ரூபாயை, எந்தவிதமான புகாருக்கும் இடமில்லாமல் வழங்கினோம்.
ஒரே நாடு; ஒரே தேர்தல் வரபோகிறது என ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. இவருடைய ஞானதிருஷ்டிக்கு மட்டும்தான் இதெல்லாம் தெரியும். கற்பனையில் கோட்டை கட்டி பா.ஜ.,விற்கு அவர் டப்பிங் பேசுகிறார். மிசாவையே பார்த்த இந்த ஸ்டாலினை மிரட்ட முடியுமா? கற்பனையில்கூட அவ்வாறு கனவு காணாதீர்கள். சசிகலாவை பார்த்தால் பயம்; பன்னீர்செல்வத்தை பார்த்தால் பயம்; டில்லியை பார்த்தால் பயம்.கோடநாடு பங்களா என சொன்னாலே பயம் என, அஞ்சி நடுங்கி வாழும் பழனி சாமிக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை பார்த்து பேச என்ன தகுதி இருக்கிறது?பழனிசாமியின் இதுபோன்ற பொறுப்பற்ற ஆணவ பேச்சுக்களுக்கு, இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
