tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி தொடரும்: ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடரும்: ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடரும்: ஸ்டாலின் அறிவிப்பு

mkstalinmeetting1-1641898727

சென்னை-பிரதமர் மோடி வருகையால் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, 'தமிழகத்தில் ஏற்கனவே அமைந்துள்ள தி.மு.க., -காங்கிரஸ் கூட்டணி தொடரும்' என,முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


மலையாள நாளிதழ் விழாவில் பங்கேற்றஸ்டாலின், 'மாநிலங்களில் கவர்னர் வாயிலாக இரட்டை ஆட்சி நடத்த பா.ஜ., முயல்கிறது' என பேசி, மத்திய அரசுக்கு எதிரான தன் நிலைப்பாட்டையும் உறுதி செய்துள்ளார்.தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்து சென்ற பின், ஆளும் தி.மு.க., கூட்டணிக்குள் சிறுசலசலப்புகள் தோன்றின. பிரதமருக்கு தி.மு.க., அரசும், அமைச்சர்களும் அளித்த சிறப்பான வரவேற்பும், பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் காட்டிய, இதுவரை இல்லாத நெருக்கமும், இந்த சலசலப்புகளுக்கு காரணமாக அமைந்தன. அதனால், தி.மு.க., தடம் மாறுகிறதோ என்ற சந்தேகம், தமிழகத்தை சேர்ந்த கூட்டணி தலைவர்களுக்கு மட்டுமின்றி, காங்கிரஸ் மேலிடத்திற்கும் ஏற்பட்டுள்ளது.


அவசர விளக்கம்


அதை அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுல், தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலுவிடம், 'தி.மு.க., ஏன் திடீரென தடம் புரளுகிறது?' என பகிரங்கமாக கேட்டதன் வெளிப்பாடு தான், 'காங்கிரஸ் கூட்டணி தொடரும்' என்ற முதல்வர் ஸ்டாலின் அவசர விளக்கம் தரவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி விட்டது. அதோடு நில்லாமல், பா.ஜ., அரசியல் நிலைப்பாட்டையும், அதன் தலைமையிலான மத்திய அரசையும் வழக்கம்போல் விமர்சித்து, தன் நிலைப்பாட்டை உறுதி செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.கேரள மாநிலம், திருச்சூரில், 'மலையாள மனோரமா நியூஸ்' சார்பில், 'இந்தியா - 75' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடந்தது.


இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பதுபோல், பினராயி விஜயனுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. என் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக அவரது செயல்பாடுகளைத் தான் கையில் எடுத்தேன்.கொரோனா நோயை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை, உங்கள் மாநில முதல்வர்வழிகாட்டுதலின்படி தான் நிறைவேற்றினேன். இது எனக்கு ஒரு பெரிய பெருமை. தி.மு.க.,வுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் இருப்பது, வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; அது ஒரு கொள்கை கூட்டணி; லட்சியக் கூட்டணி. நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம்.


எங்களுடைய கொள்கை கூட்டணி, ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது; இது தொடரும்.இந்தியா என்பது பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழக்கூடிய இடம். ஒற்றை மொழி என்பது, தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அரசு மொழியாகவோ நிச்சயம் ஆக முடியாது. அப்படி ஆனால், மற்ற மொழிகள் பாதிக்கப்படும்; காலப்போக்கில் அழிந்து விடும். இதில் மாற்றுக் கருத்து இல்லை.பா.ஜ., தலைமை, கவர்னர் வழியாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது. இவை அனைத்துக்கும் இடையில் தான், மாநிலங்களில் ஆட்சி நடத்தியாக வேண்டும்; அரசியல் நடத்தியாக வேண்டும்; மக்கள் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்தாக வேண்டும். பலவீனம் அடையாதுஇன்னும் பல நுாறு ஆண்டுகளுக்கு, இந்தியா வலிமையாக இருக்க, கூட்டாட்சி, மாநில தன்னாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், சமூக நீதி ஆகியவற்றை வலிமைப்படுத்த வேண்டும். நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின விழா, வெறும் கொண்டாட்டமாக இருக்கக் கூடாது.


இன்னும் பல நுாறு ஆண்டுகளுக்கு, இந்தியா வலிமையோடு இருப்பதற்கான திட்டமிடுதலாக நம் சிந்தனைகள் அமைய வேண்டும்.இந்தியா என்பது, ஒற்றை அரசு அல்ல. பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம். ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல. அரசியலமைப்பு சட்டம், இந்தியாவை வரையறுக்க பயன்படுத்தும் சொல். இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால், அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். ஒற்றைத் தன்மையை திணிப்பதன் வழியே, ஒற்றுமையைக் கொண்டு வர முடியாது.ஒற்றை மதம் அனைவருக்குமான மதமாக இருக்க முடியாது.


ஏனெனில், இந்தியாவில் எத்தனையோ மொழிகள், மத வழிபாட்டு முறைகள் உள்ளன. உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடு. இவற்றை வைத்து ஒன்றாக வாழ, நமக்குள் இருப்பது அன்பும், மனிதநேயமும் மட்டும் தான்.ஒற்றை மொழியை, ஒற்றை மதத்தை, ஒற்றை பண்பாட்டை திணிக்க நினைப்போர், இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கின்றனர். அவர்கள் இந்திய மக்களின் எதிரிகள். இந்த தீயசக்திகளுக்கு, நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.வலுவான மாநிலங்கள் தான் கூட்டாட்சியின் அடிப்படை. மாநில அரசுகள் மிகச் சிறப்பாக மாநிலங்களை வழிநடத்துவதால், மத்திய அரசு பலம் அடையுமே தவிர, பலவீனம் அடையாது. மக்களின் அனைத்து அன்றாடத் தேவைகளையும் பார்த்து பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை, மாநில அரசுக்குத் தான் இருக்கிறது.


மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால் தான், இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு இந்திய அரசு, கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மக்கள் விரோத சட்டங்கள்ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை, நாம் ஏற்க முடியாது. அதை வலிமையாக, உறுதியாக, ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.ஜி.எஸ்.டி., வரி வழியாக, மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடாக தரப்படும் நிதி, உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை; முழுமையாகவும் தருவது இல்லை. 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளால், எளியோருக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை, கல்வியை பல்வேறு படி நிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது. மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோத சட்டங்களாக இருக்கின்றன. இவ்வாறு முதல்வர் பேசினார்.