சாதாரண மொபைல் போன் வாயிலாக 'டிஜிட்டல்' பரிவர்த்தனை செய்யலாம்
மும்பை :'ஸ்மார்ட்போன்' வைத்துள்ளோர் மட்டுமே பயன்படுத்தி வந்த, 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையான, யு.பி.ஐ., சேவையை சாதாரண, 'மொபைல்போன்' வாயிலாகவும் மேற்கொள்ளும் வசதியை, ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் முறையில், மொபைல் போன் வாயிலாக பண பரிவர்த்தனை செய்யும் வகையில், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு வசதியை, ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.என்.பி.சி.ஐ., எனப்படும் இந்திய தேசிய பரிவர்த்தனை வாரியம் வாயிலாக இது மேற்கொள்ளப்படுகிறது.இத்திட்டத்தின்படி, வங்கி கணக்கு வைத்துள்ளோர், தங்கள் மொபைல்போனுடன் அதை இணைக்க முடியும். வங்கி வழங்கும் செயலியை பதி
விறக்கம் செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக, கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணமில்லாமலேயே, டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும், மற்றவர்களுக்கும் பணத்தை அனுப்ப முடியும்.இந்த வசதியை, ஸ்மார்ட்போன் வைத்துள்ளோர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். சாதாரண போன் வைத்துள்ளோர் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. தற்போது, சாதாரண போன் வைத்துள்ளோருக்கும், '123 பே' என்ற புதிய வசதியை, ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நேற்று கூறியதாவது:டிஜிட்டல் பரிவர்த்தனை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த, 2020 - 2021ம் நிதியாண்டில், 41 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடத்தது. அதுவே, 2021 - 2022ம் நிதியாண்டில் இதுவரை, 76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை நடந்து
உள்ளது. மிக விரைவில், 100 லட்சம் கோடி ரூபாயை எட்டுவதற்கான சாத்தியம் உள்ளது.யு.பி.ஐ., வசதியை, சாதாரண போன் வைத்துள்ளோரும் பயன்படுத்தும் வகையில், இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, நாடு முழுதும், 40 கோடி பேர் பயனடைவர். இதையடுத்து, கிராமங்கள், சின்ன நகரங்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி கிடைக்கும்.
இந்த புதிய சேவையைப் பெற, வங்கிக் கணக்குடன், தங்களுடைய மொபைல்போனை இணைத்தால் போதும். இன்டர்நெட் வசதி இல்லாமலேயே, பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
இதைத் தவிர, யு.பி.ஐ., சேவை பயன்படுத்துவோருக்கான, 24 மணி நேர தகவல் உதவி மையமும் அறிமுகம் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.