ுதுடில்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து இன்று(மார்ச்13) மாலை 4 மணி அளவில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் துவங்கியது.
இந்த கூட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் (89) தனது உடல்நிலை காரணமாக கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா வீட்டில் நடந்த கூட்டத்திலும் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை.
முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே ஆண்டனி உள்ளிட்ட சிலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏகே ஆண்டனிக்கு முன்னதாக இருதய அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. இதனால் அவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை
கடந்த 2020ஆம் ஆண்டுவரை 11 பேர் கொண்ட காங்கிரஸ் உள்துறை கமிட்டி உறுப்பினராக செயல்பட்டு வந்த மன்மோகன் சிங், கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கூட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்காததால் டில்லி காங்கிரஸ் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சோனியா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல், பிரியங்கா, ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் தோல்வி, உடகட்சி தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.