புதுடில்லி: இலவச திட்டங்களுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன என உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.
பா.ஜ., செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்தியாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். மனுவை நீதிபதி ரமணா அமர்வு விசாரித்தது.
நீதிபதி கூறியதாவது:இலவசத் திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசு சில திட்டங்களை வைத்துள்ளது. இதை கொடுங்கள், அதை கொடுங்கள், இதைக் கொடுக்க வேண்டாம். அதை கொடுக்க வேண்டாம் என உத்தரவிட்டால் அது எப்படி நடைமுறைக்கு வரும்?. பார்லி., வரம்புகளில் தலையிட விரும்பவில்லை. பிற நாடுகளை பார்த்து பொருளாதார ஒழுங்கை பின்பற்ற வேண்டியுள்ளது என்றார்.