இலங்கை சுற்றுப் பயணத்தில் கிடைத்த பரிசு தொகையை இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வழங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி; ரசிகர்கள் நெகிழ்ச்சி
ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள், சமீபத்திய இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்க நன்கொடையாக அளித்துள்ளனர் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஜூலை 11 வியாழன் அன்று தெரிவித்துள்ளது.
“இலங்கை நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக, எங்கள் ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி, சமீபத்திய இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் கிடைத்த பரிசுத் தொகையை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்” என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது.
“ஊட்டச்சத்து, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி மற்றும் மனநலச் சேவைகளை ஆதரிக்க @unicefaustralia’s திட்டங்களுக்கு இந்த நன்கொடை செல்லும்” என்று ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நன்கொடையை ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ், UNICEF ஆஸ்திரேலிய தூதுவர் மற்றும் ODI மற்றும் T20I போட்டிகளில் தேசிய அணி கேப்டனாக இருக்கும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் வழங்கியுள்ளனர். மொத்தம் 45,000 ஆஸ்திரேலியா டாலர்கள் (INR இல் 25,36,294 லட்சம்) ஆஸ்திரேலிய அணியால் நன்கொடையாக வழங்கப்படும்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மூன்று டி20, ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக ஆஸ்திரேலியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆஸ்திரேலியா அணி T20I தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தாலும், இலங்கை அணி ODIகளில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதேநேரம் டெஸ்ட் தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. இருண்ட நிதி நிலைமை காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பங்கள் மற்றும் அப்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவை பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டங்களுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியின் போது, வருகை தந்த ஆஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இலங்கை ரசிகர்கள் மஞ்சள் உடை அணிந்து வந்தனர். இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பெயரை உரக்கக் கோஷமிட்டனர்.
ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளூர் ரசிகர்களின் சைகை மற்றும் விருந்தோம்பலுக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர். மேலும், இலங்கையர்களுக்கு உதவுவதில் அவர்களின் மிகச் சமீபத்திய செயல், உள்ளூர் மக்களிடையே அவர்களை இன்னும் பிரபலமாக்கும்.