சென்னை: போதை தான் பல குற்றங்களுக்கு தூண்டுதலாக இருப்பதாகவும், போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகே போதை பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். இது தொடர்பாக அரசு சட்டங்களை கடுமையாக திருத்த உள்ளோம். சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்க இருக்கிறோம்.
போதை மருந்து விற்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய சைபர் செல் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகையான குற்றவாளிகள் இந்த சமுதாயத்தையே கெடுக்க கூடிய குற்றவாளிகள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு எந்தவித தயக்கமும் காட்டாது. போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், போதை நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
போதைப் பொருள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு செல்லும் சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும். போதைப்பொருளுக்கு சிலர் அடிமையாகி விடுகின்றனர். அதனை திருத்துவதற்கு ஒட்டுமொத்த சமூகமும் முயற்சி எடுக்க வேண்டும். பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். போதை என்பது சமூகத்தையே அழித்துவிடும் என்பதை உணர வேண்டும்.
போதைக்கு காரணம் தேடாதீர்கள், பிரச்னைகளுக்கு தீர்வை தேடுங்கள், அதன் முடிவில் வெற்றி கிடைக்கும். போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை தான். அதில் யாரும் செல்லாதீர்கள், மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள். போதை தான் பல குற்றங்களுக்கு தூண்டுதலாக உள்ளது. போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வின் காவலர்களாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.