tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
தலைநகரில் தொடர் கொலைகள்! – கேள்விக்குறியாகும் சட்டம் – ஒழுங்கு!
தலைநகரில் தொடர் கொலைகள்! - கேள்விக்குறியாகும் சட்டம் - ஒழுங்கு!

தலைநகரில் தொடர் கொலைகள்! - கேள்விக்குறியாகும் சட்டம் - ஒழுங்கு!

275426640_909630823040548_424217861869264752_n

சென்னை: ஆட்சி அமைந்த பிறகும் தன் கட்சி நிர்வாகிகளைக்கூட காப்பாற்ற முடியாமல், சட்டம்-ஒழுங்கில் திக்கித் திணறுகிறது தி.மு.க அரசு” எனக் கடுமையாக விமர்சிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். கன்னியாகுமரி செம்பன்விளை தி.மு.க பிரமுகர் குமாரசங்கர், திருநெல்வேலி பாளையங்கோட்டை தி.மு.க வட்டச் செயலாளர் பொன்னுதாஸைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சென்னை மடிப்பாக்கம் தி.மு.க வட்டச் செயலாளர் செல்வம், சென்னை பல்லவன் இல்லம் மதன், தூத்துக்குடி தாளமுத்து நகர் தி.மு.க வட்டச் செயலாளர் கண்ணன், காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் தி.மு.க மாவட்டப் பிரதிநிதி சேகர் என ஒரே மாதத்தில் தொடர்ந்து நான்கு ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். ஆளுங்கட்சியினரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நேரத்தில், சாமானியர்களின் நிலை என்ன?


மே 16-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் என்பவர் மனைவி, குழந்தைகள் கண் முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சினிமா பாணியில் மனோகரனின் காரை லாரியைக் கொண்டு மோதி இந்தக் கொலை நடந்திருக்கிறது.


இது ஒரு பக்கமென்றால், பாலியல் குற்றங்களும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. கடந்த நவம்பர் மாதம், கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் ப்ளஸ் டூ மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து போக்சோ வழக்கில் பள்ளி ஆசிரியரும், அலட்சியமாக இருந்த பள்ளி முதல்வரும் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் மாதத்தில், கோவையில் காணாமல்போன 10-ம் வகுப்பு மாணவி, ஐந்து நாள்கள் கழித்து சாக்கு மூட்டையில் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


2022 மார்ச் மாதத்தில் மட்டும், அடுத்தடுத்து மூன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தி.மு.க பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, வேலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும், கடலூரில் தனது ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக நிகழ்ந்தது.


பள்ளி மாணவர்கள் மோதிக்கொள்வதில் தொடங்கி வேலைக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் வெளிமாநிலத்தவர்களின் குற்றங்கள் வரை வன்முறையும் திருட்டும் படுஜோராக நடக்கின்றன. கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையங்களைக் குறிவைத்து சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நெல்லை வீரவநல்லூரில் நகைக்கடைக்காரரைத் தாக்கி கொள்ளையடித்து ஐந்து கிலோ நகைகளை அள்ளிச் சென்றனர். அதேபோல, திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதி நகைக்கடையின் இரும்புக் கதவுகளை உடைத்து, 375 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி, 25 லட்சம் ரூபாய் பணம் கொள்ளைபோயின. கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா, வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களால் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாகக் கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. இந்தக் கொலைக் காட்சிகள் தமிழகத் தலைநகரான சென்னையிலும் தடதடப்பதுதான் சட்டம்- ஒழுங்குச் சீர்கேட்டின் உச்சம்.


தலைநகரில் தொடரும் கொலைகள்!


மே 1-ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடந்த துக்க நிகழ்ச்சியில், சாப்பாட்டில் மண் விழுந்ததாகக் கூறி நடந்த தகராறில் சதீஷ்குமார், அருண் என இருவர் கொலை செய்யப்பட்டனர். மே 2-ம் தேதி, அம்பத்தூர், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்தன. அவற்றில் ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற ராஜி என்பவர் அங்குள்ள ஊழியர்களால் அடித்தே கொலை செய்யப்பட்டார். மே 7-ம் தேதி மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு ஐடி நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த், அவரின் மனைவி அனுராதா ஆகியோர் நகை, பணத்துக்காகக் கொலை செய்யப்பட்டு பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டனர். மே 19-ம் தேதி, கொருக்குப்பேட்டையில் போதை மாத்திரை வாங்கித்தரவில்லை என்பதற்காக 19 வயதான ராகுல் என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மே 20-ம் தேதி வளசரவாக்கத்தில் சொத்துக்காக தந்தையைக் கொன்று டிரம்மில் அடைத்து காவேரிப்பாக்கத்தில் புதைத்தார் ஒருவர். சென்னை செனாய் நகரில், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஃபைனான்ஸியர் ஆறுமுகம் என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தி.மு.க பிரமுகர் சக்ரபாணி என்பவர் ராயபுரத்தில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் 15 துண்டுகளாக வெட்டப்பட்டது. சக்ரபாணியின் தலையை இன்னமும் போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. தொடர் கொலைச் சம்பவங்களுக்கு ஏதாவது காரணத்தைப் பட்டியலிட்டாலும், குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்களைத் தடுத்தபாடில்லை போலீஸ். துணிச்சலாகவும் பட்டப்பகலிலும் கொலைகள் தொடர்கின்றன. கூலிப்படையினர் நிதானமாக வாகனத்தில் வந்திறங்கி மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதிகளில் கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் பதறவைக்கின்றன.


`தமிழகத்தில் கூலிப்படை முழுமையாக ஒழிக்கப்படும்’ எனச் சட்டப்பேரவையில் மே மாதம்தான் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதன் பிறகும் கூலிப்படையினர், ரௌடிகள்மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவுதான் இது.


தலைநகரில் தொடர் கொலைகள்! - கேள்விக்குறியாகும் சட்டம் - ஒழுங்கு!

டிபன் சாப்பிட்டது தெரியும்... காயங்கள் இருந்தது தெரியாதா?


சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில்தான் போலீஸ் கோட்டைவிட்டதே தவிர, அதிகார அத்துமீறலில் 100 மார்க் வாங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 22-ல் தஞ்சாவூர் சத்தியவான், செப்டம்பர் 17-ல் சேலம் கார்த்திக், டிசம்பர் 4-ல் முதுகுளத்தூர் மணிகண்டன், டிசம்பர் 9-ல் சென்னை சீனிவாசன், 2022 ஜனவரி 11-ல் நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன், பிப்ரவரி 4-ல் திருநெல்வேலி சுலைமான் எனக் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி, சென்னையில் கஞ்சா கடத்தல் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 26-ம் தேதி திருவண்ணாமலையில் சாராய விற்பனை தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த தங்கமணியும் உயிரிழந்தார்.


இதில், விக்னேஷ் மரணம் பெரும் சர்ச்சையானது. சட்டமன்றத்தில் இது தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், ஏப்ரல் 26-ம் தேதி பேசிய முதல்வர் ஸ்டாலின், “காவலர்களைக் கத்தியால் விக்னேஷ் தாக்க முயன்றிருக்கிறார். அதைச் சமாளித்து அவரையும், அவருடன் இருந்தவரையும் காவலர்கள் கைதுசெய்திருக்கிறார்கள். அடுத்த நாள் அவர்களுக்குச் சிற்றுண்டி அளிக்கப் பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே விக்னேஷுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக் காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் இறந்திருக்கிறார்” என்று விளக்கமளித்தார். அடுத்த பத்தே நாள்களில், “விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது” என்று கூறினார் ஸ்டாலின். “விக்னேஷ் டிபன் சாப்பிட்டது வரை விளக்கிக் கூறிய முதல்வருக்கு, விக்னேஷ் உடலில் காயங்கள் இருந்தது தெரியாதா... அப்படியானால், முதல் வரிடம் தவறான ‘ரிப்போர்ட்’ அளித்த சென்னை போலீஸ் கமிஷ்னர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” என்ற மனித உரிமை ஆர்வலர்களின் கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.



சங்கர் ஜிவால் காவல்துறையின் பாலியல், குடிபோதைச் சீண்டல்கள்!


காவல்துறையின் அத்துமீறல், லாக்கப் மரணங்கள், அதிகார துஷ்பிரயோகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. கடந்த ஜனவரி 30-ம் தேதி, பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய இளம்பெண்ணை, இரு சக்கர வாகனத்தில் வந்த திருவொற்றியூர் காவல் நிலையத்தின் காவலர் வனராஜா பாலியல் சீண்டல் செய்திருக்கிறார். இது தொடர்பான புகாரில், வனராஜா கைதுசெய்யப்பட்டார். கடந்த நவம்பர் 29-ம் தேதி, மதுரையில் இரவு சினிமா பார்த்துவிட்டு வந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக மதுரை மாநகர் திலகர் திடல் குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர் முருகன் கைதுசெய்யப் பட்டார். தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பதிவிடப்போவதாகப் பெண் காவலரை மிரட்டிய, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவலர் ஏழனை பாண்டி, சைபர் க்ரைம் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.


திருட்டு, வன்முறை, பாலியல் குற்றங்கள், கொலைகள், லாக்கப் மரணங்கள், காவல்துறையின் பாலியல் சீண்டல்கள் எனச் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. தலைநகரிலேயே ஒரு நாளைக்கு ஒரு கொலை வீதம் குற்றம் நடந்தால், மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்... என்ன செய்யப்போகிறார் முதல்வர்?


*****


இவர்கள் என்ன சொல்கிறார்கள்?


“தினசரி நாளிதழ்களில் இன்றைய தங்கம் நிலவரம், இன்றைய வானிலை நிலவரம் என்பதுபோல இன்றைய பாலியல் சம்பவங்கள், கொலை, வழிப்பறிச் சம்பவங்கள் என்று பட்டியலே போடும் அளவுக்குத் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துவருகிறது. தி.மு.க அமைச்சர்கள் 23 பேர் மீது வழக்குகள் இருக்கின்றன. அவற்றில் 13 வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள். சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றவேண்டிய காவல்துறையோ, அரசு அதிகாரிகளோ தி.மு.க அமைச்சர்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தங்கள் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆளுநரிடம் முறையிடச் சென்றால், அவருக்கே இங்கு பாதுகாப்பில்லை. சரி, சட்டரீதியாகக் கொண்டு செல்லலாம் என நீதிமன்றத்தை நாடினால், நீதியரசர் செல்வம் கண் முன்பாகவே அவருடைய மெய்க்காப்பாளரை ரௌடிகள் தாக்கி, மண்டையை உடைத்த சம்பவம் சென்னை அசோக் நகரில் நடைபெற்றது. தமிழகத்தின் இருண்ட காலம் களப்பிரர்களின் ஆட்சிக்காலம் என்று சொல்வார்கள், தற்போது நடைபெற்றுவரும் தி.மு.க ஆட்சி களப்பிரர் ஆட்சிக்காலத்தின் பார்ட் 2!”


- இன்பதுரை, இணைச் செயலாளர், அ.தி.மு.க வழக்கறிஞரணி.

-Courtesy Junior Vikatan