சென்னை:சுயநிதி முறையில் 37 இடங்களில், 4,303 வீடுகள் கட்டும் திட்ட பணிகளை விரைவுப் படுத்த, வீட்டுவசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில், சுயநிதி முறையில் குடியிருப்புகள் கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அப்போது 37 இடங்களில், 4,303 வீடுகள் கட்டும் திட்டம் 1,483 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, இதற்கான கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே பணிகள் துவங்கி, தொய்வு நிலையில் உள்ள திட்ட பணிகள் குறித்து உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இது குறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட குடியிருப்புகளை கட்டி முடிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பணிகள் தொடர்ந்து தாமதமானால், பணம் செலுத்தியவர்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளிப்பர்.எனவே, கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ள, வாரிய நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சம்பந்தப்பட்ட கோட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
