டி.வி நடிகை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, காஷ்மீர் போலீஸார் பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு- காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தின் சதுரா பகுதியில் வசித்துவந்த பிரபல டி.வி நடிகையான அம்ரீன் பட்டை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். படப்பிடிப்பு இருப்பதாகக் கூறி அவரை வீட்டிலிருந்து வெளியே அழைத்த பயங்கரவாதிகள், திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அமரீன் பட்டின், உறவினரான 10 வயது சிறுவனும் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தார். அதையடுத்து, போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்து காஷ்மீர் மண்டல ஐ.ஜி.பி விஜய் குமார், ``தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் கொலையில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். அவர்கள் ஷாகித் முஷ்டாக் பட், பர்ஹான் ஹபீப் என அடையாளம் தெரிந்தது. தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில், கடந்த மூன்று நாள்களில் மட்டும் மூன்று ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள், ஏழு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன'' என ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.