சென்னை- முல்லை பெரியாறு அணை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சட்டப் போராட்டத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை வாயிலாக, தமிழகத்தின் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகின்றன.பரிந்துரைமொத்தம், 10.5 டி.எம்.சி., கொள்ளளவு உள்ள அணையில், 7.66 டி.எம்.சி., நீரை மட்டுமே சேமிக்க உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி, அணையின் மொத்த உயரமான 152 அடியில், 142 அடிக்கு மட்டுமே நீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பேபி அணையை பலப்படுத்தி விட்டு, முழு கொள்ளளவில் நீரை சேமிக்க தீர்ப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கு, வனப்பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட வேண்டும்.இந்த பணிகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை, கேரள அரசு திடீரென ரத்து செய்து விட்டது. பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டவும், கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.
தமிழகத்திற்கு கிடைக்கும் நீரை, திசை திருப்பி, கேரளாவில் பயன்படுத்த இந்த முயற்சி நடக்கிறது.இதற்கிடையே, அணையின் பலத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்திற்கு நிபுணர் குழு பரிந்துரை செய்து உள்ளது. அணை வழக்கில் தன்னையும், ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்று, கேரள காங்., - எம்.பி., டீன் குரியாக்கோஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக நடந்து வரும், அடுத்தடுத்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.பாதுகாப்புஇதனிடையே, அணையின் நிர்வாக அதிகாரத்தை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தமிழக பொறியாளர்கள் அணைப் பகுதியில் தங்கி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பழங்காநத்தத்தில், விவசாயிகள் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.
இது, அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னையில், மீண்டும் சட்ட போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நெருக்கடி அரசுக்கு உருவாகிஉள்ளது.வரும், 18ம் தேதி துவங்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில், இப்பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன.