சென்னை :கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் கட்டணத்தை, 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரிய செயல்பாட்டை கண்காணித்தல், மின் வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையமே மேற்கொள்கிறது.
மின் வாரியம், தன் வருவாய் தேவை அறிக்கையுடன், மின் கட்டண மனுவை, ஆண்டுதோறும் நவம்பருக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவேண்டும். அதை பரிசீலித்து வரவை விட, செலவு அதிகம் இருந்தால் மின் கட்டணம் உயர்த்தப்படும். செலவு குறைந்து, வரவு அதிகம் இருந்தால் கட்டணம் குறைக்கப்படும். மின் கட்டணத்தை உயர்த்தும் முன், மக்களிடம் ஆணையம் சார்பில் கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையில், ஏப்., முதல் புதிய மின் கட்டணம் அமல்படுத்தப்படும்.
மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருந்தும், மின் கட்டண மனுவை குறித்த காலத்தில் சமர்ப்பிப்பதில்லை.இதற்கு, ஓட்டு அரசியலே முக்கிய காரணம். அதன்படி, 2018 - 19 முதல், இதுவரை மின் கட்டண மனு சமர்ப்பிக்கப்படாமல் உள்ளது. ஆனால், அந்த ஆண்டுகளின் மொத்த வருவாய் தேவை அறிக்கை மட்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மின் கட்டண மனுவை விரைந்து சமர்ப்பிக்குமாறு, ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை சமர்ப்பிக்காத நிலையில், ஆணையமே தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்த முடியும்.
அதன்படி, 2014ல், ஆணையமே அதிகாரத்தை பயன்படுத்தி, 15 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியது. பின், 2017ல், புதிய மின் கட்டண ஆணை வெளியிடப்பட்டது. அதில், மின் கட்டணம் மாற்றப்படவில்லை.
வீடுகளுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதற்காக, அரசு வழங்கும் மானிய தொகை மட்டும் குறைக்கப்பட்டதால், அரசின் மானிய செலவு சற்று குறைந்தது.
இதனால் தற்போது வரை, 2014ல் நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணமே நடைமுறையில் உள்ளது. பின், 2019ல், 30 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அந்த ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தல் முடிவு, அப்போதைய அ.தி.மு.க., அரசுக்கு சாதகமாக வராததால், மின் கட்டணத்தை உயர்த்துவது கைவிடப்பட்டது. தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், கொரோனா ஊரடங்கு, சட்டசபை தேர்தல் ஆகிய காரணங்களால், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
தற்போதைய நிலவரப்படி, தமிழக மின் வாரியத்தின் கடன், 1.60 லட்சம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது.தமிழகத்தில் தி.மு.க., அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால், செலவினங்களை சமாளிக்க, வருவாய் ஆதாரங்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மது வகைகள் மீதான வரி வருவாய்க்காக, டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் விலை, 10 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை, நேற்று முன்தினம் உயர்த்தப்
பட்டது.
அதையடுத்து, மின் கட்டணமும், 20 சதவீதம் வரை உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டண உயர்வை, முறைப்படி ஆணையத்திடம் மனு சமர்ப்பித்து அறிவிக்கலாமா அல்லது ஆணையமே அதிகாரத்தை பயன்படுத்தி உயர்த்த
செய்யலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அதில், ஆணையமே அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்தினால், அதன் மீது பழி போட்டு மின் வாரியமும், ஆட்சியாளர்களும் விமர்சனங்களை திசை திருப்ப வாய்ப்பு
உள்ளது.