டெல்லி: உக்ரைனில் இருந்து டெல்லி வந்த மாணவர்கள் அங்கிருந்து தனிவிமானத்தில் தமிழகம் அனுப்புவதற்கான பணிகள் தமிழக அரசு சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அங்குள்ள இந்திய மாணவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து வெளியேறும் தமிழக மாணவர்கள் அண்டை நாடுகளின் வழியே விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட பிற படிப்புகளில் 2,300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு மாணவர்களின் பெயர், விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் இந்திய தூதரகத்திடம் வழங்கப்பட்டு மீட்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத்திய அரசு சார்பில் விமானங்கள் மூலம் தமிழக மாணவர்கள் டெல்லி, மும்பை வழியாக சென்னை வருகின்றனர். இன்னும் கீவ், சுமி உள்ளிட்ட சில நகரங்களில் தமிழக மாணவர்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது. இவர்களை மீட்பதற்கான பணி ஒருங்கிணைப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு குழுவை அமைத்துள்ளார். இந்த குழு எம்பி திருச்சி சிவா தலைமையில் எம்பிக்களான கலாநிதி வீராசாமி, எம்எம் அப்துல்லா, டிஆர்பி ராஜா எம்எல்ஏ, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர்.
இவர்கள் டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தை சேர்ந்தர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று இக்குழுவினர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
இதில் உக்ரைனில் இருந்து வருகை தரும் மாணவர்களுக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யவும், உடனுக்குடன் தனிவிமானத்தில் தமிழகம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
இதுவரை உக்ரைனில் இருந்து டெல்லி வந்த 1011 தமிழக மாணவர்களில் 852 பேர் தமிழகம் வந்துள்ளனர். இதில் 180 மாணவர்கள் தனிவிமானத்தில் வந்தனர். தற்போது 159 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக உக்ரைன் தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்துக்கு ரூ.3.5 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நாட்டினரை வெளியேற்ற திமுக அரசு தனி பேருந்து ஏற்பாடு செய்தாக தி இந்து நாளிதழில் பத்திரிகையாளர் தவறான தகவல்களை பரப்பி சிக்கினார்.